மதுரை: திருமங்கலம் அருகே உயிரிழந்த இளைஞரின் உடலை அரசு செலவில் நல்லடக்கம் செய்ய அரசுக்கு காவல்துறை சிபாரிசு கடிதம் எழுதியுள்ளது.
மதுரை கள்ளிக்குடி அருகிலுள்ள வேப்பங்குளம் லிங்குசாமி முத்து மகன் காளையன் (23). பட்டியலின இளைஞரான இவரை ஜன.8 -ம் தேதி சிலர் வீடு புகுந்து தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. ஜன.13-ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற காளையன் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், 15-ம் தேதி ஊருக்கு அருகிலுள்ள குளத்தில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். கள்ளிக்குடி போலீஸ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், காளையன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொன்ற நபர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என, கூறி காளையன் உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து 7-வது நாளாக போராடுகின்றனர். காவல்துறையினர் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
இதற்கிடையில், திருமங்கலம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர், திருமங்கலம் கோட்டாட்சியருக்கு எழுதிய சிபாரிசு கடிதம் ஒன்றில், காளையன் உடல் பிரேத பரிசோதனை செய்த நிலையில், 16-ம் தேதி முதல் மதுரை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. இறந்த நபரின் பெற்றோர் உடலை வாங்காமல் இருப்பதால் உடல் அழுகும் நிலையில் உள்ளது. பிணவறை சுகாதார பணியாளர்களுக்கு சீர்கேடு ஏற்படும் என்பதால் அரசு செலவில் காளையன் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து காளையன் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் அரசு அதிகாரிகளிடம் இருந்து காளையன் உடலை அடக்கம் செய்ய தகவல் வரவில்லை என, திருமங்கலம் நகர் போலீஸார் தெரிவித்தனர்.