கோவை: மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பியை மனைவியுடன் வெட்டி கொலை செய்த அண்ணன் வினோத்குமார் குற்றவாளி என எஸ்.சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த 2019-ல் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அதே பகுதியில் வசித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே கனகராஜ், வர்ஷினி ப்ரியாவுடன் சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனிடையே 2019 ஜூன் மாதம் கனகராஜின் அண்ணன் வினோத்குமார், தம்பியின் வீட்டிற்கு சென்று அரிவாளாளல் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் பலத்த வெட்டு காயமடைந்த வர்ஷினி ப்ரியா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் வினோத்குமார் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனிடையே குற்றத்துக்கு தூண்டியதாக வினோத்குமாரின் நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள எஸ்.சி, எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், கனகராஜனின் அண்ணன் வினோத்குமார் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் செய்ய தூண்டியதாக கைதான சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய மூன்று பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில், ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வினோத்குமாருக்கு மரண தண்டனை வழங்கும் அளவுக்கு குற்றம் புரிந்துள்ளதால் இரு தரப்பு வாதங்களை கேட்டு வரும் ஜனவரி 29-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரானார்.