பட்டியலின பெண்ணை மணந்த தம்பியை மனைவியுடன் கொன்ற வழக்கு: அண்ணன் குற்றவாளி என தீர்ப்பு


கோவை: மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பியை மனைவியுடன் வெட்டி கொலை செய்த அண்ணன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த 2019ல் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அதே பகுதியில் வசித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது கனகராஜின் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. இதனிடையே கனகராஜ், வர்ஷினி ப்ரியாவுடன் சேர்ந்து அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே 2019 ஜூன் மாதம் கனகராஜின் அண்ணன் வினோத்குமார், தம்பியின் வீட்டிற்கு சென்று அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் வினோத்குமார் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், கனகராஜனின் அண்ணன் வினோத்குமார் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் செய்ய தூண்டியதாக கைதான சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய மூன்று பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில், ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வினோத்குமாருக்கு மரண தண்டனை வழங்கும் அளவுக்கு குற்றம் புரிந்துள்ளதால் இரு தரப்பு வாதங்களை கேட்டு வரும் ஜனவரி 29ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

x