புதுச்சேரி: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது


காலாப்பட்டு மத்திய சிறை

புதுச்சேரி: புதுச்சேரி சேதராப்பட்டில் வாட்ஸ்-அப் மூலம் அறிமுகமாகி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் பெற்றோர் கண்டித்ததால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பயந்துபோன சிறுமியின் பெற்றோர் இதுபற்றி சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிறுமியை தேடி வந்தனர். இதனிடையே சில தினங்களுக்கு பிறகு சிறுமி வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

சிறுமி சோர்வுடன் காணப்பட்டதை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, வேலூர் சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (எ) கார்த்தி (33) என்பவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சேதராப்பட்டு காவல் நிலையத்தில் முறையிட்டனர்.

போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கை மாற்றி ஏழுமலை (எ) கார்த்தியை கைது செய்தனர். விசாரணையில் ஏழுமலை (எ) கார்த்தி ஏற்கெனவே திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்த நிலையில், சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமியுடன் வாட்ஸ்-அப் மூலம் அறிமுகமான அவர் பேசி வந்துள்ளார். இதனால் நட்பு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் தன்னுடன் வந்துவிடும்படி ஏழுமலை, அந்த சிறுமியை அழைத்துள்ளார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி ஏழுமலையை பார்க்க சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை, ஏழுமலை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து சிறுமியை புதுச்சேரிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து சிறுமி அழுதுகொண்டே இருந்ததை பார்த்த பெற்றோர், கேட்டபோது தான் நடந்தவைகளை சிறுமி கூறியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதன் பின்னர் ஏழுமலை (எ) கார்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

x