புதுச்சேரி: தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவரை சக மாணவர் கத்தியால் குத்தியவரிடம் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் இன்று கூறியதாவது: "ரெட்டியார் பாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் சமூக வலைத்தளத்தில் கருத்து பரிமாற்றம் தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நேற்றைய தினம் பிளஸ் 1 மாணவரை சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அம்மாணவரிடம் இருந்துப் போலீஸார் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மாணவர்களிடையே வன்முறைக் கலாச்சாரம் பரவுவதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக சலுகைகள் அளித்து அதன்மூலம் லாபமடைந்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகள் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்து அவர்களைச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மாணவர்களைக் குற்றம் செய்பவர்களாக ஆக்குவது இளம் தலைமுறையைப் பாதிக்கும். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகுப்புகள் (Moral classes) தற்போது நடத்தப்படுவதில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு, கலை, இலக்கிய ஆர்வம் வளர்தெடுக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை வெறும் பாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கக் கூடாது. பள்ளிக் கல்வித்துறை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது. மாணவர்களின் நலனே முதன்மையானது என செயல்பட வேண்டும்.
அம்மாணவர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயார் செய்ததாகவும், அரியாங்குப்பத்தில் பட்டாசு வாங்கி அதிலிருந்து வெடி மருந்துகளைப் பிரித்து வெடி குண்டு தயாரித்ததாகவும் தெரிகிறது. மாணவனுக்குப் பட்டாசு விற்றவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிய வேண்டும். பட்டாசு விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.