உதகை: உதகையில் பிரபல தனியார் ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் மோப்பநாயுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித காரணமும் குறிப்பிடாமல், தொடர்ச்சியாக இ-மெயில்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பல்வேறு தரப்பினருக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஓட்டல்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மீண்டும் உதகையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலான மோனார்க் ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததால், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஓட்டலில் போலீஸார் சோதனை செய்து வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. எனவே இந்த மிரட்டலால் யாருக்கும் எந்தவித சிரமும் ஏற்படவில்லை. ஏற்கெனவே இந்த ஓட்டலுக்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீஸார், ‘இ-மெயில் மூலம் மிரட்டல்கள் விடுப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. இருந்தாலும் இது குறித்து சைபர்கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.