சினிமாவில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்தவர் கைது @ கோவை


கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்

கோவை: சினிமாவில் ஒப்பனைக் கலைஞர் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் பில் போடும் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு தனது மாத சம்பளம் செலவுகளுக்கு போதவில்லை. இதனால் வேறு வேலை குறித்து ஆன்லைன் பக்கத்தில் தேடி வந்தார். அப்போது சினிமாத்துறையில் ஒப்பனைக் கலைஞர் (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும், விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறி ஒரு செல்போன் எண் போடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அப்பெண், அந்தச் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள மஞ்சுமல்லா பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (53) என்பவர் பேசியுள்ளார். அவர், சினிமா துறையில் ஒப்பனைக் கலைஞர் வேலை வாய்ப்பு அதிக ஊதியத்துடன் உள்ளது. இந்த பணியிடத்துக்கு போட்டிகள் அதிகம் உள்ளது. அதனால், ரூ.7 லட்சம் பணம் கொடுத்தால் உடனடியாக வேலை கிடைத்து விடும் எனக்கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த பெண் முதல் கட்டமாக ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 540 பணத்தை அந்நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளார். அதன் பின்பு, வேலை வாய்ப்பு வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதுகுறித்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீஸார் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதன் இறுதியில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமாரை போலீஸார் செவ்வாய்க்கிழமை (ஜன.21) இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது இதுபோன்று 5-க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளன. கைதானவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், ஏடிஎம் அட்டைகள், காசோலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன’’என்றனர்.

x