விருதுநகர்: விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் பர்மா காலனியில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளிக்கு கடந்த மாதம் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதையடுத்து, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்நிலையில், விருதுநகர் அருப்புக்கோட்டை சாலை அருகே உள்ள தனியார் கல்லூரிக்கும், சூலக்கரையில் உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கும் இன்று காலை ஒரே நேரத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதனால் பதற்றம் அடைந்த கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு வெடிகுண்டு மிரட்டல் வந்த கல்லூரி மற்றும் பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் அனைவரும் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக தகவலறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒரே நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல திரண்டதால் பள்ளி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களாக பேருந்து மற்றும் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த கல்லூரி மற்றும் பள்ளியில் டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய் மூலம் கல்லூரி மற்றும் பள்ளியின் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப் பட்டது. அனைத்து வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகளிலும் போலீஸார் சோதனையிட்டனர். அதோடு கல்லூரி மற்றும் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் ஒரே இ-மெயில் மூலம் வந்ததும், ஏற்கனவே விருதுநகரில் உள்ள ஒரு பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டளும் இதே இ-மெயில் ஐடியில் வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
விருதுநகரில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டலுக்கு காரணமான நபர்களை கண்டறிந்து போலீஸார் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.