சென்னை: சென்னை யானைகவுனி, என்.எஸ்.சி. போஸ் சாலையில் நரேஷ்குமார் மேத்தா(54) என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 17-ம் தேதி இரவு தங்க நகைகளை சரிபார்த்தபோது, சில தங்க நெக்லஸ்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் மேத்தா புகார் தெரிவித்தார்.
போலீஸார் வழக்குப்பதிந்து அந்த நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தங்க நெக்லஸ்களை திருடியது பதிவாகியிருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெண், தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி(40) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
அந்தப் பெண், கடந்த மாதம் 24-ம் தேதி மேத்தாவின் நகைக்கடைக்குச் சென்று, தங்க நெக்லஸ் செய்ய ஆர்டர் கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர், கடந்த 17-ம் தேதி, ஆர்டர் கொடுத்த நகையை வாங்கச் சென்றுள்ளார். பின்னர், அந்த நெக்லஸில் சில குறைகள் உள்ளதாகக்கூறி அதை சரி செய்ய சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்போது சில தங்க நெக்லஸ்களை திருடிச் சென்றுள்ளார். அவரிடமிருந்து 83.55 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.