ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக 89 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட ஆவடி, புதிய கன்னியம்மன் நகர் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ரவுடி தினேஷ் (20) கடந்த 5-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த 7-ம் தேதி மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29), நண்பர்களுடன் ஏற்பட்ட வீண் தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 18- ம் தேதி பட்டாபிராம் அடுத்த ஆயில்சேரி பகுதியில், அப்பகுதியை சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன், அவரது தம்பி ஸ்டாலின் ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.
இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆவடி, மணலிபுதுநகர், பட்டாபிராம் பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆவடி காவல் ஆணையத்துக்குட்பட்ட பகுதிகளில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி 19, 20 ஆகிய இரு நாட்களில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸார் ரவுடிகள் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய இரு காவல் மாவட்டங்களில் பழைய குற்றவாளிகள் உட்பட 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில், 33 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 45 ரவுடிகள் நடத்தையின் அடிப்படையில் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். 11 ரவுடிகள் நன்னடத்தை பிணையம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரித்துள்ளார்.