வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: சென்னையில் வாலிபர் கைது


சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் 35 வயது பெண்மணி ஒருவர் ஜனவரி 19ம் தேதி அன்று இரவு அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, ஒரு நபர் மேற்படி பெண்ணின் அருகில் சென்று அவரை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்த அப்பெண் சத்தம் போடவே, சத்தம் கேட்டு எழுந்த பெண்ணின் கணவர் அந்த நபரை பிடிக்க முற்பட்டபோது, அந்த நபர் ஓடிச் சென்று மேற்படி வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து மேற்படி பெண் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் அத்திப்பட்டை சேர்ந்த பாபு என்பவரின் மகன் சையது அப்துல் சதார் (எ) நசீர் (32) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரி சையது அப்துல் சதார் (எ) நசீர் விசாரணைக்குப் பின்னர் ஜனவரி 20ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x