சென்னையில் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: மணிப்பூர் பெண் கைது


சென்னை: திருவான்மியூர் பகுதியில் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8,100 மாத்திரைகள், பணம் ரூ.1,650 மற்றும் ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல், திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ஜனவரி 20ம் தேதி (நேற்று) திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக Tapentadol Hydrochloride என்ற உடல் வலி நிவாரண மாத்திரைகளை பெட்டியில் மறைத்து வைத்திருந்த மணிப்பூர் சுரச்சந்த்பூர் சிங்கட் பகுதியை சேந்த தங்சுன்பியாங் என்பவரின் மனைவி உங்லியாசிங் (எ) ரெபெக்கா (Vungliaching @ Rebekka) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8,100 தபெண்டடோல் ஹைட்ரோகுளோரடு மாத்திரைகள், பணம் ரூ.1,650 மற்றும் ஐ போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி பெண் ஆன்லைன் மூலம் மேற்படி மாத்திரைகளை வாங்கி கொரியர் மூலம் பெற்று, சென்னையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி உங்லியாசிங் (எ) ரெபெக்கா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x