கரூர்: திருமணமான காதலியை அவரது கணவருடன் கொல்ல திட்டம் தீட்டிய ஒரு தலை காதலர் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சுங்க வாயிலில் உள்ள தங்கும் விடுதியில் பட்டா கத்தி மற்றும் சூரி கத்தியுடன் சிலர் தங்கியிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார் தங்கும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சூசையப்பர் பட்டினம் சிவசங்கர் (24), அவரது நண்பர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வெம்பட்டியில் வசிக்கும் செல்லூர் ஆனந்த் (38), திண்டுக்கல் மாவட்டம் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் (20) எனத் தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, சிவசங்கரன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அப்பெண் கரூரை சேர்ந்த 27 வயது இளைஞரை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டு, கரூரில் அவரது கணவருடன் வசித்து வருகிறார். காதல் தோல்வி விரக்தியில் சிவசங்கரன் அப்பெண்ணையும் அவரது கணவரையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டு தனது நண்பர்களுடன் வந்து கரூரில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிவசங்கரன் மீது சிவகங்கை நகர காவல் நிலையத்திலும், ஆனந்த் மீது மதுரை மாநகர விளக்குத் தூண் காவல் நிலையத்திலும் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அசம்பாவிதம் நடைபெறும் முன் குற்றவாளிகளை கைது செய்த பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், தனிப்பிரிவு காவலர் ராமலிங்கத்தை காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார். மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் தங்க வருபவர்கள் தொடர்பான ஆவணங்களை சரி பார்த்து தங்க வைக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.