மதுரை: எடிட் செய்த படம் மூலம் நிதி திரட்டியதாக சீமான் மீது புகார் மனு


சீமான் | கோப்புப் படம்

மதுரை: ‘எடிட்’ செய்த பிரபாகரன் புகைப்படங்கள் மூலம் மக்களிடம் பலகோடி திரள் நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையருக்கு வழக்கறிஞர் அஜித்குமார் ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.அஜித்குமார் என்பவர் மதுரை காவல் ஆணையருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் மனு ஒன்றை ஆன்லைனில் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழின தலைவர் பிரபாகரனுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டவை எனசினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக பிரபாகரனின் பெயரை கூறி கட்சி நடத்தும் சீமான், பல லட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார். பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக இத்தனை ஆண்டாக தமிழக மக்களை ஏமாற்றியுள்ளார். பல ஆண்டாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளனர்.

இப்புகைப்பட மோசடியால் தமிழ் மக்களை ஏமாற்றி திரள் நிதி என்ற பெயரில் பல கோடியை திரட்டி அரசியல் நடத்துகிறார் சீமான். எனவே, எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், தமிழகத்திலுள்ள மக்களையும் ஏமாற்றிய சைமன் என்ற சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போலி புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது போன்று தமிழக டிஜிபிக்கும் வழக்கறிஞர் அஜித்குமார் ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.

x