சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.48 லட்சம் காசோலை திருட்டு


சென்னை பெரியமேட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காசோலை திருடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பெரியமேடு சூளை வாத்தியார் கந்தப்ப தெருவில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு அருகில் அதன் ஏடிஎம் மையம் உள்ளது. இந்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வங்கி ஊழியர்கள் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினர். அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த காசோலை இயந்திரம் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடந்த 13ம் தேதி நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தில் புகுந்து, பணம் இருக்கும் இயந்திரம் என நினைத்து, காசோலை இயந்திரத்தை உடைத்துள்ளனர். பின்னர், அதில் பணம் இல்லாததால், அதில் இருந்த காசோலைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

திருடி செல்லப்பட்ட காசோலைகளின் மதிப்பு ரூ.1.48 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, வங்கி மேலாளர் பிரசன்னா பெரியமேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

x