சென்னை: கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சொந்தமான 200 கிலோ இரும்பு ராடுகளை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச் சுவர் அருகே ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு ராடுகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சில திருடு போனதாகவும் தெரிகிறது. இதையடுத்து மெட்ரோ ரயில் அலுவலக உதவி பொறியாளர் ஆகாஷ்ராஜ் என்பவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரும்பு ராடுகளை திருடியது, மடிப்பாக்கம் வண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பது தெரியவந்தது. மேலும், இவர் சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ இரும்பு ராடுகள், 1 உண்டியல், பூஜை பொருட்களை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.