பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த மணிகண்டன்(32), தேவேந்திரன்(30) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் கை.களத்தூர் காவல்நிலைய தலைமைக் காவலர் ஸ்ரீதர், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் நேற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தைக்காக மணிகண்டனை, அருணின் வயலுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த தேவேந்திரன் அரிவாளால் வெட்டியதில் மணிகண்டன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேவேந்திரன், அருண், தலைமைக் காவலர் ஸ்ரீதர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தேவேந்திரன், ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அருணை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தலைமைக் காவலர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்தும், உதவி ஆய்வாளர் சண்முகம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கொளஞ்சி, குமார், மணிவேல் ஆகியோரை பணியிட மாற்றம் செய்தும் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா உத்தரவிட்டுள்ளார்.