திருப்பூரில் குழந்தை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு- ஒருவர் கைது


திருப்பூர்: திருப்பூரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் இன்று (ஜன. 18) மீட்கப்பட்டனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிப் நிறுவனம் நடத்தி வருகிறார். வடமாநிலங்களில் இருந்து மூலப்பொருட்களை பெற்று திருப்பூரில் தேவைப்படும் நிறங்களில் ஜிப் தயாரித்து வழங்கி வந்தனர். நிறுவனத்தில் 6 பேர் பணியாற்றி வந்த நிலையில், பிஹார் மாநிலத்தில் இருந்து 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தியிருப்பதாக கூறி 1098 புகார் வந்தது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தை இன்று ஆய்வு செய்தனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரியாஸ்அகமது தலைமையிலான குழுவினர் ஜிப் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, பிஹார் மாநிலத்தை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வரும் பிஹார் மாநிலத்தை சேர்ந்த உரிமையாளரிடம், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழை கொண்டுவந்து தர உத்தரவிடப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் கண்டறியப்பட்டது. பிஹார் மாநிலத்தில் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர்களாக அவர்களை அழைத்துவர பணம் பெற்றதாகவும் புகார் எழுந்திருப்பதால், கொத்தடிமை முறையில் குழந்தை தொழிலாளர்களை அழைத்து வந்தனரா? என்பது தொடர்பாகவும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். இதில் நிறுவனத்தை கவனித்து வந்த திருப்பூரை சேர்ந்த கலீம் (39) என்பவரை வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து இன்று கைது செய்தனர்.

x