புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றிப் படுகொலை: எஸ்டிபிஐ கண்டனம்


சென்னை: புதுக்கோட்டை திருமயத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சட்டரீதியாகப் போராடிய
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி டிப்பர் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சட்டரீதியாகப் போராடி வந்த புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள வெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி, டிப்பர் லாரி ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் மாஃபியாக்களின் கனிமவள சுரண்டலுக்கு எதிராகப் போராடியும், அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவும் போராடிவந்தவர் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி ஆவார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரம், துலையானூர், லெம்பலாக்குடி பகுதியில் மண்ணையும், மலைகளையும், அரசு அனுமதியின்றி புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, எம்.சாண்ட், ஜல்லி என அந்தப் பகுதி முழுவதையும் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பாழாக்கி வருகிறது கனிம மாஃபியா கும்பல். இந்த சட்டவிரோத கும்பல்களுக்கு, மறைமுகமாக காவல்துறையும் அரசு அதிகாரிகளும் முழுக்க உதவி செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இவர் தொடர்ந்த ஒரு வழக்கில், புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க உள்ள அனைத்து குவாரிகளும் இயங்கக் கூடாது என்ற ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நீதிமன்றத்திற்கும் சென்று வழக்குப் போட்டும், கனிம வளங்களைப் பாதுகாக்கப் போராடி வந்தவர். இதனால் சட்ட விரோத கனிம மாஃபியா கும்பலுக்குத் தொடர்ந்து நெருக்கடியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கனிம மாஃபியாக்கள் மீது விரிவான ஆதாரங்களுடன் கடந்த 10-01-2025 அன்று கோட்டாட்சியரிடம் இவர் புகார் கொடுத்த நிலையில், நேற்று மதியம் அவர் மசூதியிலிருந்து தொழுகை முடித்து வந்தபொழுது, அவர் வந்த இருசக்கர வாகனம் மீது, மணல், கற்கள் ஏற்றும் டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் விபத்து இல்லை என்றும், திட்டமிட்ட படுகொலை என அவரது குடும்பத்தினரும், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினரும் தெரிவிக்கின்றனர். எஸ்டிபிஐ கட்சியும் இது திட்டமிட்ட ஒரு படுகொலையாகவே கருதுகிறது.

கடந்த 2022 முதல் தமிழகத்தின் பல இடங்களில், சட்ட விரோத மணல், கல்குவாரி உள்ளிட்ட கனிமவளக் கொள்ளைகளுக்கு எதிராகவும், கனிம மாஃபியாக்களுக்கு எதிராகவும் சட்டரீதியாகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டும் வரும் நிலையில், தற்போது புதுக்கோட்டை திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி வாகனம் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை இதனை வெறும் விபத்தாகப் பதிவு செய்து வழக்கினை முடித்துவிடாமல், கொலை வழக்குப் பதிவு செய்து, முறையான விசாரணை நடத்தி, இவரது படுகொலைக்குக் காரணமான கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் மாஃபியா கும்பல் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, கனிம மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்து, கொள்ளையடித்துச் சேமித்து வைத்துள்ள கனிமத்தை அரசுடைமையாக்க வேண்டும், மேலும் கனிம மாஃபியாக்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தவறும் பட்சத்தில் எஸ்டிபிஐ கட்சி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, மிகப்பெரும் அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x