திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 7 பேர் கைது


திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வங்க தேசத்தினர் ஏராளமானோர் உரிய ஆவணங்களின்றி, சட்டவிரோதமாக வசித்து வருவதாக பல்வேறு அமைப்புகளும் புகார் தெரிவித்தன. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி இரவு திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறைகேடாகத் தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கியிருப்போரின் ஆவணங்களை போலீஸார் பரிசோதித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடமாநிலத்தவர்கள்போல இருந்த 13 பேரிடம் போலீஸார் நேற்று விசாரித்தனர். இதில் 7 பேர் வங்க தேசத்தினர் என்பது தெரியவந்தது.

அவர்கள், இம்ரான் ஹுசைன் (40), நூரன் அபி (43), ரப்பினி மண்டல்(35), ஷாஜகான்(22), மொக்டெர்(50), ரஃபிகுல் இஸ்லம்(30), கபீர் ஹுசைன்(35) ஆகியோர் என்பதும், திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கி, அங்கு பணிபுரிந்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 பேர் மீது வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்தனர்.

x