தேனி ஜவுளி வியாபாரியிடம் ரூ.74.75 லட்சம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது


படம்: ரேவதி, வீரன்.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்(40) பொறியியல் பட்டதாரியான இவர் இங்கு ஜவுளிஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது கடையில் இதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மனைவி ரேவதி(45), மகள்பூமிகா(25) ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக புடவைகளை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியைச் சேர்ந்த வீரன் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். சுந்தரிடம் நன்கு பழகிய வீரன் மதுரையைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரிடம் தங்க பிஸ்கெட் அதிகம் உள்ளதாகவும், அதனை வாங்கி நாகபட்டினத்தைச் சேர்ந்த நகை ஆசாரியான பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து புதிய டிசைன்களில் குறைவான விலைக்கு நகை செய்து தருவதாக கூறினார்.

இதற்காக தனது மொபைலில் உள்ள நகை டிசைன்களையும் சுந்தரிடம் காட்டியுள்ளார். இதனை நம்பிய சுந்தர் 125 பவுன் நகை செய்ய கூறியுள்ளார். இதற்காக ரூ.74 லட்சத்து 75 ஆயிரத்தை பல தவணைகளில் ரேவதி, வெற்றிவேல், நகை ஆசாரி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வங்கி கணக்கு மூலம் அனுப்பி உள்ளார்.

ஆனால் பல மாதங்களாகியும் நகை செய்து தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுந்தர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து ரேவதி, பூமிகா, வீரன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரேவதி, வீரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆய்வாளர் மாயா ராஜலட்சுமி விசாரிக்கிறார்.

x