தூத்துக்குடி: சாயர்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினர், இலங்கையைச் சேர்ந்தவர் உட்பட இருவரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் பிருந்தா தலைமையிலான வனத் துறையினர் சாயர்புரம் பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, காமராஜர் நகர் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அங்கு ஓரிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக கொழும்புவைச் சேர்ந்த சத்ய கணேஷ் (40), தூத்துக்குடி தாளமுத்து நகர் சண்முகபுரத்தைச் சேர்ந்த சேவியர் பிரான்சிஸ் (40) ஆகியோரைக் கைது செய்தனர். சேவியர் பிரான்சிஸ் ஸ்ரீவைகுண்டம் சிறையிலும், வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சத்ய கணேஷ் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக வனத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், கடல் அட்டைகள் கடத்தல் பின்னணியில் வெளிநாட்டைச் சேர்ந்த யாரும் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடக்கிறது.