மாமியார் மற்றும் மனைவியை கொடூரமாக தாக்கிய நபர் கைது - சென்னையில் அதிர்ச்சி


சென்னை: ஜாம்பஜார் பகுதியில் மாமியார் மற்றும் மனைவியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை, ஜாம்பஜார், பக்கீர்சாகிப், 3வது தெருவில் தன்சிங்கின் மனைவி ரேவதி (54) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரேவதியின் மகள் இளையவாணி, செல்வேந்திரன் என்பவரை திருமணம் செய்து மேற்படி ரேவதியின் வீட்டின் அருகில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இளைய வாணிக்கும், அவரது கணவர் செல்வேந்திரனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அன்று மாலை ரேவதி, அவரது மகள் இளையவாணி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்த போது, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த செல்வேந்திரன், தனது மாமியார் மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி மாமியார் ரேவதியின் கன்னத்தில் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது மனைவி இளைய வாணியையும் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு, கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட செல்வேந்திரனை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி விசாரணைக்குப் பின்னர் நேற்று (15.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x