சென்னை: ராயபுரம் பகுதியில் ஜுஸ் கடையின் ஊழியரை மிரட்டி, கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, ராயபுரம், வடக்கு மாதா கோயில் தெருவில் வசித்து வரும் கோவையைச் சேர்ந்தவர் சுல்தான் (33), ராயபுரம், மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு ஜுஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (12.01.2025) மதியம், ஜுஸ் கடையில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் ஜுஸ் குடித்துவிட்டு பணம் தராமல் சென்றபோது, சுல்தான் அவரிடம் பணம் கேட்டதற்கு, அந்த நபர் சுல்தானிடம் பணம் தர முடியாது எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி, அவரை மிரட்டியுள்ளார்.
மேலும், ஜுஸ் கடையின் கல்லாவில் இருந்த பணம் ரூ.150-ஐ எடுத்துக் கொண்டு, தப்பிச் சென்றார். இது குறித்து சுல்தான், ராயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அறிவழகன் (25), என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அறிவழகன் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அறிவழகன் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.