கோவை: கோவை அருகே நடந்த சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை - சத்தி சாலையில் இன்று (ஜன.10) காலை ஒரு கார் வந்து கொண்டிருந்தது. சிறுமுகை அருகேயுள்ள பால்காரன் சாலை அருகே கார் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து அங்குள்ள சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி கார் நின்றது. விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. விபத்து குறித்து அறிந்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிறுமுகை போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில், காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், 3 பேர் காயமடைந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (58), வெங்கடஆதிரி (62) என்பதும், காயமடைந்தவர்கள் அதேப் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (44), துரைசாமி (61), சாமி (41) ஆகியோர் என்று தெரியவந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்னர், கர்நாடகாவில் இருந்து காரில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனர். பின்பு அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கேரளாவில் இருந்து கோவை வழியாக கர்நாடகா செல்ல முடிவு செய்து அவ்வழியாக வந்தனர். அதன்படி இன்று அவர்களின் கார் கோவை வந்த போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் காரை ஓட்டி வந்த சாமி என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் தெரிந்தது. உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்ட போலீஸார், காயமடைந்த மூவரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.