ஆவடி அருகே மன உளைச்சலால் மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை: அதிர்ச்சி கடிதம் 


ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராமில் மன உளைச்சலால் மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் -வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் டேவிட் மனைவி கிரேசி(40). இவரது மகள் எப்சிபா (15). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த கிரேசி, மகளுடன் தனியாக வசித்து வந்தார். கிரேசி எவ்வித பணிக்கும் செல்லாததால், போதிய வருமானமில்லாததால், மகளின் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், கிரேசியின் குடும்ப செலவுக்கு அவரது தாயும், அண்ணனும் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அளித்து வந்துள்ளனர். கணவர் டேவிட்டும் அவ்வப்போது கிரேசிக்கு தொகை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னையும் தன் மகளையும் கணவர் மற்றும் தாய் வீட்டார் சரிவர கவனிக்க வில்லை. ஆகவே மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என கிரேசி கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று இரவு, தன்னையும், மகளையும் இணைத்து கட்டுக்கம்பியால் சுற்றிக் கொண்டு, மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பட்டாபிராம் போலீஸார், உட்புறமாக பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று, கருகிய நிலையில் கிடந்த கிரேசி, எப்சிபா ஆகிய இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x