தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் தலைமன்னார் செல்ல முயன்ற இருவர் கைது


கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் டிரோசன்

ராமேசுவரம்: தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு படகு மூலம் செல்ல முயன்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இரண்டு பேரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தைச் சேர்ந்தவர் டிரோசன் (25). இன்று, தனுஷ்கோடியில் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த டிரோசனை போலீஸார் தனுஷ்கோடி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த 2019 ஆம் ஆண்டு விமானம் மூலம் தமிழகம் வந்த டிரோசன், விசா முடிந்த பின்னரும், இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல் உறவினர்கள் வீட்டில் சட்டவிரோதமாக தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ்கோடியிலிருந்து படகு மூலம் சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்வதற்காக, ஏஜெண்டுகளாக செயல்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ், உமா செல்வன் ஆகியோரிடம் பணம் கொடுத்து செல்லவிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து தனுஷ்கோடி போலீஸார் டிரோசனையும், ஜெய்கணேஷையும் கைது செய்து தலைமறைவாகியுள்ள உமா செல்வனை தேடி வருகின்றனர்.

x