ஓசூர் நீதிமன்றத்தில் பரபரப்பு: குற்றவாளிக்கு பாதுகாப்பாக வந்தவர்களிடம் 5 துப்பாக்கிகள் பறிமுதல்!


ஓசூர்: ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிக்கு பாதுகாப்பாக வந்தவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொளதாசபுரம் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து பாகலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சடலமாகக் கிடந்தவர் கர்நாடகா மாநிலம் சூளக்குண்டா காலனியை சேர்ந்த ரேவந்த்குமார் (26) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரேவண்ணா என்பரை கைது செய்தனர். விசாரணையில், விநாயகர் சதூர்த்தியன்று விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரேவந்த்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்து. இதனையடுத்து ரேவண்ணா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து நேற்று முக்கிய குற்றவாளியான ரேவண்ணா ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று ஓசூர் நீதிமன்றத்திற்கு கையெழுத்திட காரில் ரேவண்ணா வந்தார். அப்போது அவருடன் பாதுகாப்பிற்கு மற்றொரு காரும் வந்தது. இந்த கார் ஓசூர் நீதிமன்றத்தில் நுழைந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாகலூர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர் காரை சோதனை செய்தனர்.

காரில் 5 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்து, காவல் நிலையதிற்கு அழைத்து சென்றனர். அங்கு எஸ்பி., தங்கதுரை விசாரணைசெய்து வருகிறார். நீதிமன்றத்திற்குள் காரில் துப்பாக்கிகளுடன் வந்த நபர்களால் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸார் கூறும் போது, ஜாமீனில் வெளியே வந்த கொலைக்குற்றவாளி ரேவண்ணா ஓசூர் நீதிமன்றத்தில் கையெப்பமிட வந்த போது, அவரது பாதுகாப்பிற்காக வந்தவர்களின் காரை நீதிமன்ற நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, காரில் வந்த 5 பேர் 5 கைத்துப்பாக்கிகளை வைத்திருந்தனர். அவர்கள் தேசிய அளவில் துப்பாக்கியை கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளதாக கூறினர்.

ஆனாலும் அவர்கள் தமிழகத்திற்குள் நுழையும் போது காவல்துறையிடம் அனுமதிப்பெற்றிருக்க வேண்டும். மேலும் எதற்காக துப்பாக்கிற்கு லைசன்ஸ் பெற்றார்களோ அதற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் துப்பாக்கியை மற்றவர்கள் பாதுகாப்பிற்காக கொண்டு வந்தது குற்ற செயல் தான். இது குறித்து 5 பேரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் என கூறினர்

x