சென்னை மாநகர பேருந்தின் கண்ணாடி உடைப்பு; ஓட்டுநர் மீது தாக்குதல் - 3 பேர் கைது


சென்னை: தண்டையார்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கி, கண்ணாடியை சேதப்படுத்திய 2 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மமன் கோயில் தெருவைச் சேர்ந்த சரத்குமார் (33) மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சரத்குமார் நேற்று முன்தினம் (07.01.2025) அன்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் - மணலி செல்லும் தடத்தில் பேருந்தை (தடம் எண். 44 B) ஓட்டிக்கொண்டு T.H ரோடு, ஆர்த்தி ஸ்கேன் சென்டர் அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிர்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் திடீரென இருசக்கர வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளனர். ஓட்டுநர் சரத்குமார் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.

உடனே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேற்படி பேருந்தின் ஓட்டுநர் சரத்குமாரிடம் வாய்தகராறு செய்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 நபர்களும் மேற்படி ஓட்டுநர் சரத்குமாரை அவதூறாக பேசி அவரது தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் பேருந்தில் இருந்த கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். காயமடைந்த சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட திருவான்மியூரைச் சேர்ந்த ரவி மகன் ராக்கி (எ) ராகேஷ் (27), புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் மகன் அசோக் (28) மற்றும் அப்துல் ஜாபர் மகன் அப்துல் நிசார்(24) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ராக்கி (எ) ராகேஷ் (H-3 தண்டையார்பேட்டை HS) மீது 5 குற்ற வழக்குகளும், அசோக் (எ) கீரை தோட்டம் அசோக் (H-5 புது வண்ணாரப்பேட்டை HS) மீது பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் நேற்று (08.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x