மதுரவாயலில் இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்குதல்: வாலிபர் கைது


கைதான ஈனோக்

சென்னை: மதுரவாயல் பகுதியில் காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாங்காடு பகுதியில் வசித்து வரும் 23 வயது பெண், மதுரவாயல், நூம்பல் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அறிமுகமான கோவூர் பகுதியைச்சேர்ந்த ஈனோக் என்பவர் அந்தப் பெண்ணிடம் காதலிக்க வற்புறுத்தி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் ஈனோக்கிடம் பேசாமல் அவரின் தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் 06.01.2025 அன்று மாலை அந்தப் பெண் வேலை முடித்து நிறுவனத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஈனோக் அப்பெண்ணிடம் தகராறு செய்து காதலிக்க வற்புறுத்தி அவதூறாக பேசி கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏசுபாதம் என்பவரின் மகன் ஈனோக்(29) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் மேற்படி ஈனோக் தனியார் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருவதும், இவர் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஈனோக் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x