போக்சோ வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி: கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ்!


சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை அண்ணா நகர் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர் ப. சுதாகர், இன்று முதல் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வட்டச் செயலாளர் சுதகார் என்பவரை நேற்று கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் அண்ணா நகர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

x