சென்னை: படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக் கேட்ட பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். மணலியிலிருந்து பாரிமுனை நோக்கி மாநகர அரசுப் பேருந்து ஒன்று கடந்த யிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, புளியந்தோப்பு காவல் நிலைய பேருந்து நிலையத்தில் நின்று, புறப்பட்டபோது, ஓர் இளைஞர் படிக்கட்டிலேயே நின்று பயணித்துள்ளார்.
இருக்கையில் அமரச் சொல்லியும் கேட்காததால், பேருந்து நடத்துநர் பிரேம்குமார் (39), அந்த இளைஞரைக் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நடத்துநரை தாக்கி, டிக்கெட் அச்சிடும் இயந்திரத்தை உடைத்து விட்டுத் தப்பியோடிவிட்டார்.பிரேம்குமார் இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில்
புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியது புளியந்தோப்பு மோதிலால் நேரு தெருவைச் சேர்ந்த வீர மணிகண்டன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.