பூந்தமல்லி: கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 6.5 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இன்று போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, தமிழகத்துக்கு கண்டெய்னர் லாரியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக இன்று ஆவடி காவல் ஆணையரகத்தின் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் போலீஸார், நசரத்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த, கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அச்சோதனையில், அந்த லாரியில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 6.5 டன் எடையுள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம்-பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸார், 6.5 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள், புகையிலை பொருட்களின் உரிமையாளரான காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த செந்தில் என்கிற கனகலிங்கம் (38), கண்டெய்னர் லாரி ஓட்டுநரான திருப்பத்தூர், ஏ.கே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27), அவரது உதவியாளரான விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும், கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விநியோகம், கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்’ என்றார்.