சென்னை: தொழில் லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூர், சின்னாண்டிமடம் பகுதியில் வசிப்பவர் செந்தில் (42). பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் (43) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில், முகைதீன் தான் செய்து வரும் தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும், வரும் லாபத்தில் 60 சதவீத பங்குகளை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய செந்தில் ரூ.38 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட முகைதீன் லாபத்தில் பங்கு கொடுக்காமல் இருந்துள்ளார். பெற்ற பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த செந்தில் இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, பண மோசடியில் ஈடுபட்டதாக முகைதீன், அவரது மனைவி உஸ்னாராபேகம் (38), மைத்துனர் ஏஜாஸ் (37) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.