மதுரை: மனைவியால் தீவைத்து எரிக்கப்பட்ட மதுரை மேயரின் நெருங்கிய உறவினரும், திமுக நிர்வாகியுமான பொன்விஜய் (48), ஐந்து நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் பொன் விஜய் திமுக தெற்கு மாவட்ட மீனவரணி நிர்வாகியான இவர் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி இலக்கியா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பொன்விஜய் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தின் சகோதரர் ஆவார்.
பொன்விஜய் மொபைலில் அடிக்கடி வீட்டுக்கு வெளியே சென்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த இலக்கியா கணவருடன் பொன்விஜய் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.
சமீபத்தில் உறவினர்கள் பேசி இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி தம்பதிக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை அதிகரித்தது. கோபத்தில் இருந்த இலக்கியா 31-ம் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொன்னிஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.
பொன்விஜய்யின் அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் கூடலூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிந்து இலக்கியாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
பொன்விஜய்க்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட தால் தொடர்ந்து அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு கூடலூருக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பொன்விஜய் இறந்ததை தொடர்ந்து மனைவி இலக்கியா மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.