தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்


தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசியில் பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலையில் கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர், 10 லிட்டர் கேனில் பெட்ரோல் கொண்டுவந்துள்ளார். கோயில் கோபுரவாசல் முன்பு திடீரென கேனை திறந்து, அதில் இருந்த பெட்ரோலை தரையில் ஊற்றி தீ வைத்தார். இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். உடனடியாக, தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, தீ வைத்த இளைஞர் கோயிலுக்குள் செல்ல முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தென்காசி போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த பாலன் (31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘ஆனந்தபாலன் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். ‘நான்தான் சிவன் என்றும், நான்தான் கோயிலில் உள்ளேன்’ என்றும் கூறுகிறார். யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தீ வைத்ததாக தெரியவில்லை. பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

தீ வைக்கப்பட்ட இடத்தை தென்காசி டி.எஸ்.பி. தமிழ் இனியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x