பிராங்க் விபரீதம்: திருப்பூர் கல்லூரி மாணவர் பிறந்தநாளில் தற்கொலை


திருப்பூர்: சக மாணவர்கள் பிராங்க் செய்ததால், திருப்பூர் கல்லூரி மாணவர் பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பச்சையப்பன்நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி வேலுமணி. இவரது மகன் சத்ய நாராயணன் (21). கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன.4) காலை சத்ய நாராயணன் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி கூச்சலிட்டனா்.

இதுகுறித்து அளித்த தகவலின்பேரில்,நல்லூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு சத்யநாராயணன் தனது கல்லூரி பேராசிரியர்கள், உறவினர்கள் மற்றும் சிலருக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், “இனி எவ்வாறு கல்லூரிக்கு செல்வேன்? அன்னைக்கு அவன் போன் பண்ணி மிரட்டியதில் இருந்து எனக்கு மிகவும் பயமாக உள்ளது. இரவெல்லாம் தூங்க முடியவில்லை. அதே நியாபகமாக உள்ளது. என்னை மீண்டும் வந்து மிரட்டினால் நான் என்ன செய்வேன்?’ என அழுதபடி பதிவிட்டுள்ளார். இதனால் கல்லூரியில் ஏதேனும் பிரச்சனையா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினா்.

அப்போது கல்லூரியில் சக மாணவா்கள் பிராங்க் என்ற பெயரில் சத்ய நாராயணனை, அலைபேசியில் தொடர்பு கொண்டு நக்கல் செய்துள்ளனர். அடித்து தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் பயந்து போன சத்ய நாராயணன் அச்சத்துடனும், மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இதன் காரணமாக அவா் தனது பிறந்தநாளான நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடா்பாக நல்லூர் போலீஸார் தற்கொலை வழக்கு பதிந்துள்ளனர். மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தினால் அவரை பிராங்க் செய்த 3 மாணவா்களின், பெற்றோர்களுக்கு தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் கல்லுரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கல்லூரி மாணவர் பிறந்தநாளன்று ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x