வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமான கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
காட்பாடி காந்திநகரில் தமிழக அமைச்ச துரைமுருகன் வீடு மற்றும் எம்.பி கதிர் ஆனந்த்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனையை தொடங்கினர்.
கதிர் ஆனந்த் குடும்பத்துடன் விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாருமே இல்லாத நிலையில் 7 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர், துபாயில் இருந்தபடி கதிர் ஆனந்த் சோதனையை தொடர கூறியிருந்தார். அதன்படி, கதிர் ஆனந்தின் பிரிதிநிதிகளான வன்னியராஜா, சுனில்குமார், வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் நேற்று பகல் 2 மணியளவில் சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கினர். இந்த சோதனை நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவுற்றது. அதேநேரம், கிங்ஸ்டன் கல்லூரியில் மட்டும் நேற்று காலை தொடங்கிய சோதனை 24 மணி நேரத்தை கடந்து இன்றும் (டிச.4) தொடர்கிறது.
கிங்ஸ்டன் பொறியில் கல்லூரியில் நடைபெற்ற சோதனையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக வெள்ளை வேனில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்துடன் துப்பாக்கி ஏந்திய வங்கி பாதுகாவலர்களுடன் வந்தனர். இந்த வாகனம் மீண்டும் பாதுகாப்புடன் நள்ளிரவு அங்கிருந்து சென்றது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி என்பதால் பணம் இருந்தது. அந்த பணத்தை வங்கி அதிகாரிகள் உதவியுடன் சரிபார்த்து எஸ்பிஐ வங்கியில் உள்ள அமலாக்கத்துறையின் கணக்கில் வரவு வைத்துள்ளனர். அந்த பணத்துக்கு நிர்வாக தரப்பில் கணக்கு காட்டிவிட்டு திரும்ப பெறலாம் என்பதால் அந்த பணம் குறித்த விவரம் வெளியிடவில்லை. அங்கு பெரிய தொகைதான் சிக்கியுள்ளது. மற்றபடி கல்லூரியில் உள்ள ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றனர்.