சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு


விருதுநகர்: சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் எனும் பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது, காலை 9.40 மணி அளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. அந்த அறைகளில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இதனையடுத்து சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

x