ராஜபாளையம்: ராஜபாளையம் சம்பந்தபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது ஏறி துணிகள் துவைத்தும், மது அருந்தியும் போதை ஆசாமிகள் அசுத்தம் செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி 18-வது வார்டு சம்மந்தபுரம் மேலப்பள்ளிவாசல் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு இந்தப் பகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், மர்ம நபர்கள் குடிநீர் தொட்டி மேலே ஏறிச் சென்று ஆடைகளை துவைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: “குடிநீர் தொட்டி மேல் ஏறி துணி துவைப்பது, மது அருந்துவது, தொட்டிக்குள் இறங்கி குளிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கேட்டால் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் குடிநீர் தொட்டி வளாகத்தில் சுற்றுச் சுவர் அமைத்து, சிசிடிவி அமைத்து காவலாளியை நியமிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.