நெல்லை மாவட்டத்தில் 2024-ல் கொலை வழக்குகள் 21% குறைவு


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 -ம் ஆண்டில் கொலை வழக்குகள் 21 சதவிகிதம் குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 2024 -ம் ஆண்டில் பொதுவாக பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதுமில்லை.

கொலை மற்றும் காய வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 6 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.

இரட்டை ஆயுள்தண்டனை பெற்றுக் கொடுத்தது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடந்த 2023 -ம் ஆண்டில் பதிவான கொலை வழக்குகளைவிட 2024-ம் ஆண்டில் 21 சதவிகிதம் வழக்குகள் குறைந்துள்ளன. நிகழ்ந்த கொலை வழக்குகளில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் அனைத்து மட்டங்களிலும் எடுத்த கடுமையான நடவடிக்கைளின் காரணமாக, 2024-ம் ஆண்டில் சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை. 17 கொலை முயற்சி சம்பவங்கள் காவல் துறையினரின் துரித மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயவழக்குகளை பொருத்தமட்டில், 2023-ம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 2024-ம் ஆண்டு 8 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன.

2024-ம் ஆண்டில் பதிவான சொத்து வழக்குகளில் 60 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 915 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.2.60 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 18 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட போகசோ வழக்குகளில் சம்பந்தபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கெதிரான 8 குற்றவழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைபொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 259 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 64.939 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 48 வாகனங்களை கைப்பற்றியும், அவர்களின் 46 வங்கிக் கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 25 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கைப்பற்றப்பட்ட 84.25 கஞ்சா போதை பொருள் அழிக்கப்பட்டது. மேலும் குட்கா வழக்குகளில் 351 பேர் கைது செய்யப்பட்டு, 916.96 கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் மணல் திருட்டில் ஈடுபட்ட 132 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மணல் திருட்டிற்கு உபயோகப்படுத்திய 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023 -ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 -ம் ஆண்டில் சாலை விபத்துகள் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. 18 சதவிகிதம் மரணங்கள் குறைந்துள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 203 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்புவோர், பிற இனத்தவரை இழிவுபடுத்தும் விதமாகவும், சாதிய வன்மத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் புதிதாக 1685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாணவர்களிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட, 38 போக்குவரத்து வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்கு காலை, மாலை காவலர்களை அனுப்பி ரோந்து செய்யப்படுகிறது. மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான பிரச்னைகள் ஏற்பட வாய்புள்ள 30 பள்ளிகள் கண்டறியப்பட்டு தினமும் காலை, மாலை ரோந்து அனுப்பப்பட்டு வரப்படுகிறது. 94 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு ரோந்து அனுப்பி மாணவர்களிடையே பிரச்னை எழாமல் கவனித்து வரப்படுகிறது. மாதம் ஒருமுறை அந்தந்த பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளிலும் 654 ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், 8057 போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. கணினி வழி குற்றங்கள் சம்பந்தமாக 150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2372 போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 2024 -ம் ஆண்டில் கொடுங்குற்றங்களில் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ரூ.27 லட்சம் தீருதவித் தொகை வழங்குவதற்காக கருத்துருக்கள் மாவட்ட சட்ட பணிக்குழுவிற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

x