ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் ரநோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் தனியார் ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்துக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். அப்போது, மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு, ராமநாதபுரம் நோக்கிப் புறப்பட்ட விறகு லாரி, ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் நோயாளியின் மைத்துனர் சகுபர் சாதிக் (47) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நோயாளி வரிசைகனி, அவரது மகள் அனீஸ் பாத்திமா (40) ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். நோயாளியின் உதவிக்காக வந்த மண்டபம் தனியார் மருத்துவர் ஆயிஷா பேகம் (35), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஜியாஸ் (26), நோயாளியின் உறவினர்கள் ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40) ஆகியோர் பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களில் ஹர்ஷத், கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஜியாஸ், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் மீது லாரி மோதிய வேகத்தில், ஆம்புலன்ஸின் பின்னால் வந்த ஒரு பேருந்தும், காரும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில் காரில் இருந்த 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.