மேட்டூர்: மேட்டூர் அருகே 2 ஜோடி யானை தந்தத்தை கடத்தி வந்து விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே ஏழரைமத்திகாடு பகுதியில் யானை தந்தம் கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் மேற்பார்வையில் மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் ராஜேஷ், சிவக்குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் இன்று மாலை யானை தந்தம் விற்பனை கும்பலிடம், மாறு வேடத்தில் பேசி ரூ.5 கோடிக்கு வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து கொளத்தூர் அடுத்த ஏழரைமத்திகாடு பகுதியில் நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 ஜோடி யானை தந்தத்தை விற்க முயன்ற போது கும்பலை வனத்துறையினர் சுற்றிவளைத்தனர். இதில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரையும் பிடித்து, வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் சேலம் கொளத்தூர் அடுத்த செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி (48), கொளத்தூர் ஏழரைமத்திகாடு பகுதியை சேர்ந்த பெருமாள் (50) மற்றும் ஒண்டியப்பன் (59), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), வாழப்பாடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (46) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், ஒரு கார், 2 இருசக்கர வாகனங்களையும், 2 ஜோடி யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இவர்களிடம் யானை தந்தம் எப்படி கிடைத்தது, தந்ததிற்காக யானை கொல்லப்பட்டதா, யானை தந்தத்தை விற்க முயற்சித்ததில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் தீவிர விசாரணையில் நடத்தினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொளத்தூர் அடுத்த ஏழரைமத்திகாடு பகுதியில் 2 ஜோடி யானை தந்தம் நிலத்தில் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய யானை மற்றும் சிறிய யானையின் தந்தம் ஆகும். 2 யானை தந்தங்களும் சுமார் 7 கிலோ எடையுடையது. கர்நாடக மாநிலம் அல்லது ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியை சேர்ந்த யானையாக இருக்கலாம். இந்த கும்பலில் உள்ள 5 பேரும் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, இறந்து கிடந்த யானையின் தந்தத்தை எடுத்து வந்து நிலத்தில் புதைத்து வைத்தாக தெரிவித்துள்ளனர். வீரப்பன் இறந்த வருடத்தில் யானை தந்தம் எடுத்து வந்துள்ளதாலும், 20 வருடங்களுக்கு பிறகு யானை தந்தம் வெளியே எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்ததால் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.