தாம்பரம்: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியை கொலை செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலையூர், இந்திரா நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சூர்யா (21) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் மப்பேடு–ஆலப்பாக்கம் பிரதான சாலையில் புத்தூர் அருகே காலி இடத்தில் கை கால் கட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக சேலையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அகரம்தென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபரிகணேசன் (25), சேலையூர் குட்டக்கரையை சேர்ந்த மீன் வியாபாரி ஐயப்பன் (26), குரோம்பேட்டை கோதண்டம் நகரை சேர்ந்த விஜயபிரதாப் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
சேலையூர் இந்திரா நகர் அருகே உள்ள ‘டாஸ்மாக்’ கடையில், சூர்யா, சபரி கணேஷ், ஐயப்பன் ஆகியோர் ஆட்டோவில் மது அருந்தியுள்ளனர். இதையடுத்து மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் குரோம்பேட்டையில் உள்ள விஜயபிரதாப் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு 4 பேரும் சேர்ந்து மீண்டும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சபரி கணேசன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சூர்யாவை அடித்ததோடு கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். தொடர்ந்து ஐயப்பனும் கழுத்தை அறுத்துள்ளார். விஜயபிரதாப் குழவி கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். செய்வதறியாத நிலைமையில் இருந்த மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இருந்த சூர்யா உடலை வீட்டில் இருந்த துணி மற்றும் பிளாஸ்டிக் கவர்களால் கட்டி மப்பேடு ஆலப்பாக்கம் பகுதியில் புதர் என்று நினைத்து சாலையோரம் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.