ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: 4 பேரை கைது செய்து போலீஸார் நடவடிக்கை


ஆவடி: பொன்னேரி அருகே தீயம்பாக்கத்தில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக 4 பேரை நேற்று முன் தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ் (50).

தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 2004 -ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தீயம்பாக்கம் கிராமத்தில் 36 சென்ட்நிலத்தை சுந்தரவடிவு என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கி அனுபவத்தில் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆரோக்கிய தாஸ், தீயம்பாக்கம் கிராமத்தில் உள்ள தன் நிலத்துக்கு வில்லங்கச் சான்றுபோட்டு பார்த்தார். அதில், 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஆரோக்கிய தாஸுக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்பிலான நிலத்தை, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (47), போலி பத்திரம் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், அம்பத்தூர், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த சரவணன்(50) என்பவருக்கு செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆரோக்கிய தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி மத்திய குற்றப் பிரிவின் நிலப் பிரச்சினை தீர்வுப் பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், சரவணன், விஸ்வநாதன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த செங்குன்றம் அருகே விளாங்காடு பாக்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் (41), குரோம்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார் (33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.

x