சென்னை: காசிமேடு சிங்கார வேலன் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் குமரன் (32). கப்பலில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டருகே பெண் ஒருவர் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அதை குமரன் கடந்து சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் நின்றிருந்த 3 பேர், ‘ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பெண்கள் கோலம் போடுவது தெரியாதா? இந்த வழியில் செல்கிறீர்களே’ என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகளில் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் குமரனை சரமாரியாக குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது தந்தை விஸ்வநாதன் (70), குமரனின் நண்பரான ராகேஷுக்கும் கத்தி குத்து விழுந்தது.
3 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே குமரன் இறந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிந்த போலீஸார், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு ஆகாஷ் (23), காசிமேடு சிங்கார வேலவர் நகர் சரவணன் என்ற பாம் சரவணன் (24), மற்றொரு ராகேஷ் (26), புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.