லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தனது 4 சகோதரிகள், தாயை 24 வயது இளைஞர் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ நாகா பகுதியில் ஷரன்ஜித் என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த மாதம் 30-ம் தேதி அர்ஷத் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன் அறையில் அவரது தாய் அஸ்மா, சகோதரிகள் ஆலியா (9), அல்ஷியா (19), அக்சா (16), ரஹ்மீன் (18) ஆகியோரும் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை ஓட்டல் அறையில் தாய் அஸ்மா, 4 சகோதரிகளையும் அர்ஷத் பயங்கரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அவர்களது கைகளையும் அவர் வெட்டியுள்ளார். இதன் பின்னர் ஒரு வீடியோவை அர்ஷத் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தனது 4-வது சகோதரி சாகும் தருவாயில் இருந்துள்ளார். அந்த வீடியோவில் அர்ஷத்தின் தந்தையும் இருந்துள்ளார்.
வீடியோவில் அர்ஷத் கூறியதாவது: என் பெயர் அர்ஷத். இன்று, என்னுடைய வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர்கலின் நிர்ப்பந்தத்தால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். என் தாயையும் சகோதரிகளையும் என் கைகளால் கொன்றேன். இதற்கு, எங்கள் காலனியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழிய செயல்களைச் செய்தனர். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை.
உ.பி. முதல்வர் யோகிஜிக்கு ஒரு வேண்டுகோள். இது போன்றவர்களை விட்டுவிடாதீர்கள். இந்த மரணங்களுக்கு முழு காலனியும் பொறுப்பு.
இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர் அகமது, அசார், சிறுமிகளை விற்கும் அவரது உறவினர்கள்தான் காரணம்.
எங்களை சிறைக்கு அனுப்பவும், எங்கள் சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர். நாங்கள் இதை எதிர்த்தோம். காவல்துறையிடம் உதவி கேட்டேன், தலைவர்களிடம் உதவி கேட்டேன். ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் பதாவுன் (உ.பி.யில் ஒரு மாவட்டம்) பகுதி குடியிருப்பாளர்கள். எங்களை வங்கதேசத்தினர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் பதாவுனில் வசிக்கும் எங்கள் அத்தையிடம் இருந்து நீங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். நாங்கள் மதம் மாற விரும்பினோம். இன்று என் சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கின்றனர். நானும் இறந்து விடுவேன்.
பிரதமர் மோடிஜி, முதல்வர் யோகிஜி அவர்களே. அனைத்து முஸ்லிம்களும் ஒரே மாதிரி இல்லை. இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. நான் உயிருடன் இருக்கும் போதே நீதி வழங்குங்கள். இல்லை என்றால் நாங்கள் இறந்த பிறகாவது நீதி வழங்குங்கள்.
காலனி மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பல ஏழைகளின் பெண் குழந்தைகளை இவர்கள் தூக்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். அவர்கள் போலீஸாரிடம் பணம் கொடுத்து விஷயத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றனர்.
எனது குடும்பத்தின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது உங்கள் விருப்பம். நான் அவர்களை கொடூரமாக கொன்றேன். அவர்களது கவுரவத்தைக் காப்பாற்றவே கொன்றேன்.
கூப்பிய கைகளுடன் நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அந்த வீடியோவில் அர்ஷத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து அர்ஷத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய லக்னோ நகர துணை போலீஸ் கமிஷனர் ரவீணா தியாகி கூறும்போது, “24 வயதான அர்ஷத்தை கைது செய்துள்ளோம். சம்பவ இடத்திலேயே அவர் இருந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவோம்" என்றார்.