திருப்பூர்: திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்த்து வரும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 8 வயது மகன், தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம் முசைபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரியாத் குமார் (36). இவரது மனைவி ஜோதி தேவி(32). தம்பதியர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் தங்கி பணியின் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களது மகன் ரோஷன்குமார்(8). இரண்டு கால்களும் செயல்படாத நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இன்று (டிச.31) தம்பதியர், ரோஷன்குமாரை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகன் வீட்டுக்குள் இல்லை. அருகில் தேடிப் பார்த்தபோது சுமார் மூன்று அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ரோஷன் குமார் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.