திருப்பூர்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிகவுண்டம்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்( 32). இவர் 16 வயது பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதற்கு சிறுமியும், சிறுமியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆனந்தன் தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். ஒருகட்டத்தில் சிறுமி பேசாமல் செல்ல, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
புத்தாண்டை கொண்டாடிவிட்டு, நள்ளிரவு 12.30 மணி அளவில் சிறுமி தனியாக சென்றபோது, ஆனந்தன் சிறுமியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். சிறுமி மறுக்கவே கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியில் உள்ளவர்கள் ஆனந்தனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு பின் காப்பாற்றினார்கள். இதுகுறித்து குன்னத்தூர் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்த குற்றத்துக்கு ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். இதையடுத்து ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.