திருநின்றவூரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் பறிமுதல்: கார் ஓட்டுநர் கைது


 திருநின்றவூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மற்றும் கார் ஓட்டுநர் உதயகுமாருடன் வனத் துறையினர்.

திருவள்ளூர்: திருநின்றவூர் பகுதியில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 யானை தந்தங்களை இன்று (டிச.31) வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியில் யானை தந்தங்களை கும்பல் ஒன்று பதுக்கி வைத்து, விற்பனையில் ஈடுட முயன்று வருவதாக சென்னை, வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை வன விலங்கு குற்றத் தடுப்புப்பிரிவினர், யானை தந்தங்கள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர்.

அத்திட்டத்தின் படி, அவர்கள், இன்று மதியம் திருநின்றவூர் பகுதியில் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த கும்பலிடம், யானை தந்தங்களை வாங்குவது போல் நடித்து அவர்களை திருநின்றவூர்- கோமதிபுரம் பகுதிக்கு காரில் வர வைத்தனர். அப்போது, வன விலங்கு குற்றத் தடுப்பு பிரிவின் ஒரு பகுதியினர், திருவள்ளூர் வன சரகர் அருள்நாதன், வன பாதுகாப்பாளர் முனுசாமி தலைமையிலான வனத் துறையினர் அருகில் கார்களில் மறைந்து இருந்தனர்.

இதனை அறிந்த யானை தந்தங்கள் பதுக்கல் கும்பல் காருடன் தப்பியோட முயன்றது. இதையடுத்து, வன விலங்கு குற்றத் தடுப்பு பிரிவினர், திருவள்ளூர் வனத்துறையினர், காரை துரத்தி சென்று, பிடித்தனர். இச்சம்பவத்தில் காரில் இருந்த இருவர் தப்பியோடினர். கார் ஓட்டுநரான, காஞ்சிபுரம் மாவட்டம், இஞ்சமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் காருடன் சிக்கினார். தொடர்ந்து, காரை சோதனை செய்ததில், காரில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான, சுமார் 4 கிலோ எடை கொண்ட 3 யானை தந்தங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 -ன் படி வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் வனத் துறையினர், உதயகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்து யானை தந்தங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தப்பியோடியவர்கள் யார்? யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? உள்ளிட்டவை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x